Feature : இந்தியா vs தென் ஆபிரிக்கா – அச்சமூட்டும் வேகம் எதிர் அசத்தல் துடுப்பாட்டம்!!!

India vs South Africa test series Features Article Tamil today
(India vs South Africa test series Features Article Tamil today)

– ​A.R.V.லோஷன்

இன்று தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கும் கிரிக்கெட் தொடரானது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடராக அமையப்போகிறது. கிரிக்கெட்டின் பழம்பெரும் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் ஆஷஸ் முடிவுறும் நேரத்தில் தென் ஆபிரிக்க – இந்தியத் தொடர் ஆரம்பிப்பது கிரிக்கெட்டின் குதூகலம் இல்லாமல் வேறென்ன?

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சொந்த நாட்டிலும், இந்தியாவை ஒத்த கால நிலை, களத்தன்மைகளைக் கொண்ட இலங்கையிலும் பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளாமல் இலகுவாக வெற்றிகளைக் குவித்து டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்திலுள்ள இந்திய அணி அண்மைக்காலத்தில் தனது முதலாவது பெரும் சவாலை சந்திக்கப்போகிறது.

இதுவரைக்கும் தென் ஆபிரிக்காவிலே எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் வெல்லாத இந்திய அணிக்கு இது ஒரு மிகப் பெரும் சோதனை தான்.

உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை என்று சொல்லக்கூடியளவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடந்த 2017இல் மாறி மாறி ஓட்டங்களை மலையாகக் குவித்திருந்தார்கள். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களையும் சந்தித்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்தும் இந்திய ஆடுகளங்களில்..
ஒன்றில் தட்டையான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இல்லையேல் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்.

இன்று முதல் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை சந்திக்கவிருப்பதோ உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் அச்சுறுத்தும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை.

மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சம் 2 அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்க தென் ஆபிரிக்கா மிக உறுதியான 5 உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு (ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், பிலாண்டர், றபாடா, க்றிஸ் மொரிஸ்), மேலதிகமாக மிதவேகப்பந்தை வீசும் பெலகாவாயோவும் இருக்கிறார்- யாரைத் தெரிவு செய்வது, யாரை விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினையே ஓய்வு அளித்து மற்றையவர்களைப் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள் என்றால் எத்தகைய பலம் அது?

அதுவும் இன்று கேப்டவுனில் ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டி முதல் அத்தனை ஆடுகளமுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான எகிறும் ஆடுகளங்களை விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களது நோக்கம் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

இதுவரை காலமும் இவ்விரு அணிகளின் டெஸ்ட் மோதல்களில்
விளையாடியவை – 33
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி – 13
இந்தியாவுக்கு வெற்றி – 10
சமநிலை – 10

ஆனால் தென் ஆபிரிக்காவில்,
17 டெஸ்ட் போட்டிகளில்,
தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி – 8
இந்தியாவுக்கு வெற்றி – 2
சமநிலை – 7

இந்த நிலையை இப்போதிருக்கும் வெற்றிக்காக ஆவேசத்துடன் விளையாடக்கூடிய தனது இளைய அணியின் மூலம் அடையும் விருப்போடு இருக்கிறார் விராட் கோலி.

அதற்கு ஏற்றதாக இந்தியாவின் பலம்வாய்ந்த அசத்தல் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. தென் ஆபிரிக்காவின் ஆடுகளங்களிலும் ஈடுகொடுத்து ஆடக்கூடிய நுட்பங்கள் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.
முக்கியமாக கடந்த வருடத்தில் 1000 ஓட்டங்களுக்கு மேலே குவித்த புஜாராவும் கோலியும்.

இதிலே மூன்றாம் இலக்கத்தில் ஆடும் புஜாரா உலகின் மிக நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வார்க்கப்பட்டவர் போல. கடந்த வருடத்தில் 4 சத்தங்களுடன் 1140 ஓட்டங்களைக் குவித்திருந்த புஜாராவின் ஓட்டக்குவிப்பும் நின்று நிலைப்பும் இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.

அதேபோல உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முன்னின்று ஓட்டக்குவிப்பிலும் வழிநடத்தி 5 சதங்களைப் பெற்ற (இவற்றில் இரண்டு இரட்டை சத்தங்கள்) கோலி இங்கிலாந்தில் தடுமாறியதைப் போல இல்லாமல் நேர்த்தியாக, துணிச்சலாக ஆடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

முரளி விஜய் இன்னொரு முக்கியமான வீரர். வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் விஜய் மிக நேர்த்தியாக ஆடக்கூடிய வீரர். ரஹானேயும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை அணியோடு தொடர்ச்சியாகத் தடுமாறியிருப்பது அவரது form பற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தான் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தவரும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவான், ராகுல் ஆகிய இருவருமே தம்மை நிரூபித்தவர்கள். எனினும் தவானே இந்தியாவின் தெரிவாக அமைய அவரது அனுபவமும் அதிரடியும் காரணமாக அமையும்.
இந்தியா மேலதிகமாக ஒரு வேகத்தையும் சேர்த்துக்கொள்ள பாண்டியாவின் சகலதுறைத் திறமை பயன்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் போட்டிகளில் கலக்கிய பும்ராவுக்கு அறிமுகத்தை வழங்கி மூன்று வேகப்பந்து வீச்சாளரோடு களம் கண்டிருக்கிறது. ஜடேஜா உடல்நலக்குறைவு அஷ்வினை மட்டும் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உபாதை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய மிகச்சிறந்த அணியோடு இறங்கியுள்ளது.
துடுப்பாட்டத் தெரிவுகளில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடிவந்த பவுமாவை இன்று விட்டுவிட்டு ஆடவேண்டிய நிர்ப்பந்தம்.
எனினும் அம்லா, டீன் எல்கர் (கடந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்) மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்துள்ள உபாதை கடந்த டீ வில்லியர்ஸ், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ் ஆகியோரோடும் உலகத் தரம் வாய்ந்தததாகத் தெரிகிறது.

எனினும் ஐந்து முழு நேரப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்திருப்பதால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவாக விளையாடும் அபாயம்.

டீ கொக்கும் ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரரே. எனினும் அவருக்குப் பிறகு பிலாண்டர் வருவது துடுப்பாட்டம் பலவீனமானதாகவே தெரிகிறது.
ஆயினும் தென் ஆபிரிக்கா தன்னுடைய வேகப்பந்துவீச்சாளரில் வைத்துள்ள நம்பிக்கை அது.

இதனால் தான் இந்தத் தொடர் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுக்கும் இந்தியாவின் ஓட்டக்குவிப்பில் ஈடுபடும் அசத்தல் துடுப்பாட்ட வீரருக்கும் இடையிலான மோதல் தொடராகக் கருதப்படுகிறது.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் இது.

3-0 என்று தென் ஆபிரிக்காவிடம் இம்முறை தோற்றாலும் முதலிடம் பறிபோகாது எனும் அளவுக்கு கடந்த சில மாதகாலத் தொடர்ச்சியான வெற்றிகள்.

தென் ஆபிரிக்காவுக்கோ கடைசியாக 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் வைத்துக் கண்ட 3-0 என்ற (4 டெஸ்ட்களில்) தோல்விக்கு வேகப்பந்து ஆடுகளங்களில் வைத்துப் பழி தீர்க்கும் எண்ணம்.

இதுவரை கலக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரை உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வரிசை சமாளிக்குமா? என்பதே தொடரின் முதலாவது கேள்வி…

<<Related News>>

<<Our other websites>>

Tegs : India vs South Africa test series Features Article Tamil today
India Cricket news Tamil. India vs South Africa test series 
Features Article Tamil today, India vs South Africa test series 
Features Article Tamil today, India vs South Africa test series Features 
Article Tamil today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here