2018 என்ன கொண்டுவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு?

Sri Lanka Cricket Features Article today

(Sri Lanka Cricket Features Article today)

– ​A.R.V.லோஷன்

கடந்து சென்ற 2017ஐப் போல மிக மோசமான ஒரு ஆண்டு இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு அமைந்ததே இல்லை.
மூன்று விதமான போட்டிகளிலும் இதே நிலைமை.
மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து விளையாடிய 57 போட்டிகளில் வெறும் 14 வெற்றிகள் & 40 தோல்விகள்.

தரப்படுத்தல்களில்
டெஸ்ட் – 6ஆம் இடம்.
ஒருநாள் – 8 ஆம் இடம்.
T 20 – 8 ஆம் இடம்.

தலைவர்கள் மாறி மாறி வந்தார்கள். பயிற்றுவிப்பாளர்களில் மாற்றம் வந்தது. இறுதியாகத் தேர்வாளர்களும் மாற்றப்பட்டார்கள்.
ஆனால் வெற்றிகள் மட்டும் கைகூடவில்லை.

3 மிக மோசமான வெள்ளையடிப்புக்கள் – ஒருநாள் தொடர்களில்.
இலங்கையில் வைத்து இந்தியா அனைத்துவிதமான போட்டிகளிலும் 9-0 என்று துடைத்துவிட்டுப்போனது பேரவமானம்.

பல முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகளும் காயங்களும் சேர்ந்து இலங்கை அணிக்கு ஏற்கனவே இருந்த நிலையை மோசமாக்கின. குறிப்பாக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சகலதுறை வீரர் அசேல குணரத்ன, வேகப்பந்துவீச்சாளர்கள் தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீரா, ஷமிந்த எறங்க, நுவான் பிரதீப் ஆகியோரின் உபாதைகள் இலங்கை அணிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

பிரதியீட்டு வீரர்களாக உள்ளே வந்த புதிய வீரர்களும் தங்கள் இடங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள சிறப்பாக ஆடியது மிகக் குறைவு. ஒரு சில வீரர்களைத் தவிர மற்றையோர் எல்லோருமே மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளையெல்லாம் பாருங்கள், யாராவது ஒரு சிரேஷ்ட வீரர்/ நிரந்தர வீரருக்கு உபாதை ஏற்படும்போது அல்லது ஒய்வு வழங்கப்படும்போது அதை பயன்படுத்தி உள்ளே வரும் வீரர் மிகச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி தெரிவாளருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்.

வெளியே சென்ற வீரர் தனது இடத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியாமல்போகும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்மைக்காலமாக இங்கிலாந்து, நியூ சீலாந்து அணிகளிலும் இதே நிலைமை.

அந்தளவுக்கு இந்த அணிகளில் மேலதிக வீரர்களின் பலம் – Bench Strength மிகையாகவே உள்ளது.

இந்தியா எல்லாம் இப்போதுள்ள வீரர்களின் போட்டித்தன்மை மற்றும் வள நிறைவைப் பார்த்தால் இன்னொரு சர்வதேச அணியை உருவாக்கிவிடலாம்.

ஆனால் இலங்கை அணியின் 2017ஐ மீளப்பார்த்தால் பதினொருவர் கொண்ட உருப்படியான அணி ஒன்றை உருவாக்குவதே மிக சிரமமான விடயமாக இருந்துள்ளது.

உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் என்று அவர்களை சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்தும் நேரம் மிகமோசமாக அவர்கள் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார்கள்.

இது அண்மைக்காலத்தில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரால் விமர்சனத்துக்குள்ளான இலங்கையின் உள்ளூர் மட்டக் கிரிக்கெட் போட்டிகளின் கட்டமைப்பின் மிகப் பலவீனமான தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது என்பது தெளிவு.

அப்படியும் நம்பிக்கையைக் காப்பாற்றி தமது சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய சில இளைய வீரர்களை நம்பிக்கை வழங்காமல், தொடர்ச்சியான வாய்ப்புக்களை வழங்காமல் விட்ட தேர்வாளர்களை என்னவென்பது?

இலங்கைக்கு கடந்த ஒரு வருட காலமாகச் சிறப்பாகத் துடுப்பாடி வந்த குசல் மெண்டிஸ் கடந்த இந்தியத் தொடருக்கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படாமை, தனஞ்சய டீ சில்வா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறூராக ஆடிய பின்னர் காரணமே இல்லாமல் கழற்றிவிடப்பட்டமை, ரோஷென் சில்வா போன்ற வீரர்களுக்கு மிகத் தாமதமாக வாய்ப்பு வழங்கியது என்று பலவித உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

முன்னுக்குப் பின் முரணான பல தெரிவுகளும் முட்டாள்தனமான முடிவுகளும் இலங்கை அணியையே கேலிக்கூத்தாக மாற்றியிருந்தன.
எனினும் இப்போது சந்திக்க ஹத்துருசிங்க முழுமையாகப் பொறுப்பேற்ற பின்னர் சுயாதீனமாக செயற்பட அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே ஹத்துருசிங்க பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது ஹத்துருசிங்க தேர்வாளராகவும் செயற்பட்டிருந்தார். எனினும் இலங்கையணியைத் தெரிவுசெய்யும் தேர்வாளராக அவர் கடமையாற்றப்போவதில்லை. ஆனாலும் முன்னைய இலங்கைப் பயிற்றுவிப்பாளரின் காலங்களில் இலங்கைத் தேர்வாளர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் சேர்ந்தே தலையிட்டு பல தலைவலிகளை வழங்கிவந்ததை போல ஹத்துரு காலத்தில் நடக்காது என்று நம்பலாமா?

ஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பின் பயிற்றுவிப்புக்கள் மிக நேர்த்தியாக இடம்பெறுவதாக இப்போதைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு, சோர்ந்து போன இலங்கை வீரர்களுக்கு உற்சாகமும் சேர்ந்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இலங்கையைச் சேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளர் என்பதால் தமது குறை, நிறைகளையும் தேவைகள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளையும் தயக்கமில்லாமல் தமது மொழியிலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
ஹத்துருசிங்கவின் அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச அனுபவமும் கைகொடுக்கும் என நம்பலாம்.

இன்னும் சுவாரஸ்யமான ஒரு விடயம் எந்த அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துரு இருந்தாரோ அதே நாட்டிலேயே தனது முதலாவது பணியை ஆரம்பிக்கப்போகிறார்.

வருகின்ற 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவிருக்கும் முக்கோணத் தொடருடன் ஆரம்பிக்கவுள்ள இலங்கையின் புதிய கிரிக்கெட் ஆண்டு, பங்களாதேஷுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் முக்கியத்துவம் பெறுகிறது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளையே சொந்த மண்ணில் வைத்து மண்கவ்வ வைத்த பங்களாதேஷ் தற்போது தடுமாறிக்கொண்டிருக்கும் இலங்கை அணியின் வருகையை ஆவலுடன் பார்த்துள்ளது.

அதிலும் இலங்கையில் வைத்து இலங்கையை வீழ்த்திய உற்சாகமும் ஹத்துருசிங்கவை பழி தீர்க்கும் ஆர்வமும் சேர்ந்தே இருக்கிறது.
இந்த சவாலில் ஜெயிப்பது இலங்கை அணிக்கு நிச்சயம் பெரிய உற்சாகத்தை 2018 முழுவதும் தரும்.

அதன் பின் தொடரவுள்ள போட்டித் தொடர்கள் –

மார்ச்சில் இலங்கையில் இடம்பெறவுள்ள T 20 முக்கோணத் தொடர் – மற்றைய அணிகள் இந்தியா, பங்களாதேஷ்.

ஜூன் – ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்ட் போட்டிகள்.
இலங்கை முதன்முறையாக சரித்திரபூர்வமான பார்படோஸ் மைதானத்தில் விளையாடவுள்ளது.

ஓகஸ்ட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்கா வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள்.
ஒக்டோபரில் இங்கிலாந்து இலங்கை வருகிறது. 3 Test, 5 ODI and 1 T20

இந்த அணிகளை இலங்கை தனது சாதக சூழ்நிலைகளை பயன்படுத்தி வெல்வதன் மூலம் தரப்படுத்தலை உயர்த்திக்கொள்ளும் ஒரு அரிய வாய்ப்புக் கிட்டலாம்.

இடையே இந்தியாவில் ஆசியக் கிண்ணப்போட்டிகள். ஒருநாள் போட்டிகளில் சரிந்து கிடைக்கும் இலங்கை அணி தன்னை அதற்கு முதலேயே திடப்படுத்தவேண்டும்.

இவ்வருடத்தில் இறுதியாக இலங்கை அணி நியூசீலாந்துக்குப் பயணிக்கும். 2 Test, 3 ODI and 1 T20

அவ்வேளையில் இலங்கை அணி இருக்கும் நிலை பற்றி இப்போதைக்கு ஊகிப்பது சிரமம் தான்.

எனினும் 40 வயதாகும் ரங்கன ஹேரத்தின் ஓய்வினை கவலையுடன் இலங்கை எக்கணமும் எதிர்கொள்ளவேண்டி வரலாம். ஒரு சின்ன உபாதை கூட அவரை ஓய்வுக்குத் தள்ளிவிடும்.

டெஸ்டில் இலங்கையின் துரும்புச் சீட்டு ஹேரத் இல்லாத காலத்துக்கு இலங்கை இப்போதைக்குத் தயாரில்லை. புதிய நம்பகமான சுழற்பந்து கரங்களைத் தயார்படுத்தவேண்டும்.

அதே நிலை தான் இப்போது தேர்வாளர்களால் ‘ஓய்வு ‘ வழங்கப்பட்டுள்ள லசித் மாலிங்கவுக்கு. வயதேறி வரும் தம்மிக்க பிரசாத்தும் நீண்டகாலத்துக்கு உகந்த வீரரில்லை.

இவர்கள் எல்லோரையும் விட முக்கியமாக அஞ்சலோ மத்தியூஸ். இப்போது தான் 30 வயது ஆனாலும் அடிக்கடி உபாதைக்கு உள்ளாகும் மத்தியூஸ் இப்போதெல்லாம் பந்துவீசுவது குறைவு. அப்படியே பந்து வீசினாலும் வெகுசில ஓவர்கள் மட்டுமே. நீண்ட நேரம் துடுப்பாடினால் உபாதையடைகிறார். இவரையும் நீண்ட கால நோக்கில் முடியாது.

புதிய, இளைய தலைமுறை பொறுப்பேற்று திடப்படுத்தவேண்டும்.2017 இல் சிறப்பாகத் துடுப்பாடி நம்பிக்கை தந்த தற்போதைய தலைவர் தினேஷ் சந்திமால், டிமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்கவோடு எதிர்காலத்துக்கான வீரர்களாக நம்பிக்கையளிக்கும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டீ சில்வா, ரோஷென் சில்வா ஆகியோரும் தம்மைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தவேண்டும்.

பந்துவீச்சாளர்கள் சர்வதேசத் தரத்துக்கு உயரவேண்டும். அதற்கேற்ற தெரிவும் இருக்கவேண்டும். முன்பிருந்த இலங்கை அணியின் தரமான களத்தடுப்பு மீண்டும் வேண்டும்.

தன்னை வங்கப்புலிகளை மேலுயர்த்தி ஆச்சரிய வெற்றிகளைப் பெற வழிகாட்டிய ஹத்துருசிங்கவின் கைகளில் இப்போது இலங்கைச் சிங்கங்கள்.

பார்க்கலாம் பிறந்துள்ள 2018 எப்படி அமைகின்றது என்று…

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Sri Lanka Cricket Features Article today, Sri Lanka Cricket News, 
Sri Lanka Cricket Features Article today, Cricket News Tamil,
Sri Lanka Cricket Features Article today

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here