உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் – சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தெரிவான ஆறு அணிகள்

World Cup Cricket qualifiers super six 2018

(World Cup Cricket qualifiers super six 2018)

​A.R.V.லோஷன்

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் சூப்பர் சிக்ஸுக்கான ஆறு அணிகளும் தேர்வாகியுள்ளன.

டெஸ்ட் அந்தஸ்துடைய நான்கு அணிகளான மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே, அண்மையில் டெஸ்ட் அந்தஸ்தைத் தாமதாக்கிய அயர்லாந்து & ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்பார்க்கப்பட்டது போலவே தெரிவாகியுள்ளன.
இவற்றோடு அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய ஸ்கொட்லாந்து ஆகியன ஏனைய இரு அணிகள்.

ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை மண்கவ்வச் செய்ததுடன் ஆரம்பித்த அதிர்வலை நேற்று இறுதி முதற்சுற்றுப் போட்டியில் சிம்பாப்வேயுடன் சமநிலைப்படுத்திய – tie போட்டி வரை தொடர்ந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கண்ட தோல்வியையடுத்து வீழ்ச்சியின் பாதையில் என்று நினைத்திருந்தபோதும், மிக ஆதிக்கம் செலுத்தி நான்கு போட்டிகளிலுமே வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முழுமையான புள்ளிகளோடு தெரிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி மிக மயிரிழையில் தான் தெரிவுபெற்றது.
நேபாள அணி நேற்று ஹொங் கொங் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய பரிசு தான் இந்த வாய்ப்பு.
நேற்று ஹொங் கொங் வென்றிருந்தாலோ, அல்லது சில ஓவர்களுக்கு முன்னதாக நேபாளத்துக்கு வெற்றி கிடைத்திருந்தாலோ ஆப்கானிஸ்தானிய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.

இப்படியொரு அருமையான வாய்ப்பைக் கிட்டவந்து தவற விட்டதை நினைத்து இவ்விரு அணிகளும் வரை கவலைப்படக்கூடும்.

எனினும் இப்போதுமே சூப்பர் சிக்ஸ் சுற்றிலிருந்து அதிகூடிய புள்ளிகளோடு தெரிவாகும் இரண்டு அணிகளில் ஒன்றாக வரக்கூடிய வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது.

காரணம் ஆப்கானிஸ்தானோடு சேர்ந்து B பிரிவிலிருந்து தெரிவாகியுள்ள சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து இரு அணிகளுடனுமே தோற்றிருந்தது.

இதனால் தான் முதற்சுற்றின் ஒவ்வொரு போட்டியினதும் வெற்றிகள் மிக முக்கியமானதாக அமைந்தன.

இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் பிரிவு A அணிகள், பிரிவு B அணிகளை மட்டுமே எதிர்த்து விளையாடவுள்ளன. மற்றும்படி முதற்சுற்றில் விளையாடிய இரு சகஅணிகளுடனான வெற்றிப் புள்ளிகளும் சேர்க்கப்படும்.
இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

இரண்டு தடவை (முதலிரு உலகக்கிண்ணங்கள்) சம்பியன் ஆன மேற்கிந்தியத் தீவுகளுடன் சவால் விட்டு உள்ளே நுழையப் போகின்ற அணிகள் யார் என்பதே ரசிகர்கள் ஆர்வத்துடன் இனி பார்க்கப்போகும் போட்டிகளின் சுவாரஸ்யம்.
இந்தப் போட்டிகளின் முக்கியத்துவம் கருதி அனைத்து சூப்பர் சிக்ஸ் போட்டிகளையும் நேரலையாக ஒளிபரப்ப ICC நடவடிக்கை எடுத்துள்ளது.

 

அத்துடன் ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது போல, இந்தத் தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் முன்னணி இடங்களைப் பெறும் துணை அங்கத்துவ (டெஸ்ட் அந்தஸ்த்து இல்லாத) அணிகள் மூன்றுக்கும் WCL சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்துக்கும் 2022 ஆம் ஆண்டுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படவுள்ளது.

இப்போதைக்கு ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் தமது அந்தஸ்தை நீட்டித்திருப்பதோடு, இனித் தொடர்ந்து நடைபெறவுள்ள 7 முதல் 10 வரையான இடங்களைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இருந்து நேபாளம், ஹொங் கொங், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளில் ஒன்றுக்கு வாய்ப்புள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : World Cup Cricket qualifiers super six 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here