ஆரம்பமாகிறது ஆஷஸ்!!!

Ashes feature article Tamil 2017

(Ashes feature article Tamil 2017)

A.R.V.லோஷன்

சர்வதேச கிரிக்கெட்டின் மிகப் புராதன வரலாறு கொண்ட அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

 

இந்த முறை தொடர் அவுஸ்திரேலியாவில். உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இருவர் இரு அணிகளின் தலைவர்களாக வழி நடத்த டெஸ்ட் போட்டிகளுக்கு என்று மகத்துவம் இன்னும் வழங்கும் ரசிகர்களைக் கொண்ட அணிகள் மோதும் போட்டித் தொடர் இது.

 

கடந்தமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை அப்போதைய இங்கிலாந்தின் அணித்தலைவர் அலிஸ்டயர் குக்கின் தலைமையிலான இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்றெடுத்தது.
அத்தோடு கடைசியாக நடந்து முடிந்த 5 தொடர்களில் 4இல் வென்றிருப்பது இங்கிலாந்துஅணியே தான்.

எனினும் அவுஸ்திரேலிய மண்ணில் நடக்கும்போது சூழ்நிலை கொஞ்சம் வித்தியாசம். அவுஸ்திரேலியாவின் கரம் சற்று ஓங்கியே இருக்கும்.
இம்முறையும் அவ்வாறு தான் தெரிகிறது.

 

கடந்த ஆஷஸில் விளையாடிய அணிகளில் இருந்து சிற்சில மாற்றங்களோடு இரு அணிகளும் களத்தில்.

 

அவுஸ்திரேலிய அணி அதே தலைவரோடு. இங்கிலாந்துக்கு ஆஷசில் முதற்தடவையாக ஜோ ரூட்டின் தலைமையில்.

 

எனினும் தொடர் ஆரம்பிக்க முதலே வீதிச்சண்டை ஒன்றில் சிக்கி காவற்துறையின் விசாரணையால் குழுவில் சேர்க்கப்பட்டு பின்னர் விளக்கிக்கொள்ளப்பட்ட பென் ஸ்டோக்சின் இன்மையானது இங்கிலாந்துக்கு பேரிழப்பு தான். துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் உச்ச நிலையில் இருந்த ஸ்டோக்ஸ் நிச்சயம் தனித்து நின்று இம்முறை ஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு வென்று கொடுக்கும் ஆற்றல் கொண்டவராகத் தெரிந்திருந்தார்.

 

அவரது இடத்தை நிரப்பக்கூடியவராக வேறு யாரும் சகலதுறை வீரர்கள் இல்லாதபோதும், கிறிஸ் வோக்ஸ் ஒரு அற்புதமான சகலதுறை வீரராக நம்பிக்கை தருகிறார். பயிற்சிப் போட்டிகளில் விக்கெட்டுக்களை அள்ளி எடுத்திருந்தார்.

மத்திய வரிசைக்கு கீழே துடுப்பாட்ட மொயின் அலி மற்றும் பெயர்ஸ்டோ ஆகியோரும் இங்கிலாந்துக்கு உறுதியளிக்கக் கூடியவர்களே.

 

அவுஸ்திரேலிய அணியிலும் கடைசி நேரத்தில் உபாதை சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.

பல குழப்பங்கள் மத்தியில் அறிவிக்கப்பட்ட குழாமில் இப்போது டேவிட் வோர்னர் (கழுத்து பிடிப்பு), அவர் விளையாடாது போனால் அவரது ஆரம்ப இடத்திலே ஆடப்போவதாக எண்ணியிருந்த ஷோன் மார்ஷ் (தசைப்பிடிப்பு) ஆகிய இருவரும் நாளை விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.

 

முன்னரே அணிக்குள் வந்திருக்கவேண்டியவர் என்று கருதப்படும் கிளென் மக்ஸ்வெல் இப்போது தற்காப்புக்காக பிரதியீட்டு வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.

 

ஏற்கெனவே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அண்மைக்காலமாக அணியில் இடம்பிடித்துவந்த ரென்ஷோவை மாற்றி அண்மைக்காலமாக சிறப்பாக ஆடிவந்துள்ள இளம் வீரர் பன்குரோப்ட்டுக்கு இடம் கொடுத்துள்ள அவுஸ்திரேலியா மத்திய வரிசை வீரராக 34 வயதான ஷோன் மார்ஷை மீள அழைத்திருந்தது.

அதே போல 7 ஆண்டுகளுக்குப் பிறகு விக்கெட் காப்பாளராக டிம் பெயினை அழைத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.

 

எனினும் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு மிக உறுதி வாய்ந்ததாகவும் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் வழங்கும் எகிறும் ஆடுகளங்களில் அச்சுறுத்துவதாகவும் தெரிகிறது.
ஸ்டார்க், ஹெஸில்வூட், கமின்ஸ் என்று மூன்று வேகப்பந்துவீச்சாளரோடு கூடவே அனுபவம் வாய்ந்த சுழல் பந்துவீசும் லயோனும்…

 

இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த அண்டர்சன்னும் ப்ரோடும் கூடவே வோக்ஸ்சும் இதற்கு ஈடுகொடுக்கக் கூடியவர்களே. தேவையேற்படின் புதியவராக ஜேக் போலும் சேர்ந்து கொள்வார். அலியின் சுழல்பந்தும் இருக்கிறது.

 

எனினும் தொடரைத் தீர்மானிப்பது தலைவர்கள் இருவரின் துடுப்பாட்டம் மட்டுமன்றி, இரு அணிகளிலும் அனுபவத்தோடு அதிரடி மோதும் இரு பக்க ஆரம்பத் துடுப்பாட்ட நட்சத்திரங்களும் தான்.

 

இங்கிலாந்தின் அலிஸ்டயர் குக் – சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஒரே வீரராகக் கருதப்படும் இவர் ஏற்கெனவே அவுஸ்திரேலியமண்ணில் சதங்கள் பலவற்றைக் குவித்த ஒருவர்.
மறுபக்கம் அவுஸ்திரேலிய சரவெடி டேவிட் வோர்னர். அடித்தாடைக் கூடிய இவர் பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவராகவும் எதிர்பார்க்கப்படுகிறார்.

கடந்த முறை ஆஷஸ் தொடரில் சதங்களுடன் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார்.

 

இரு அணிகளிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் இளம் வீரர்களாக இருப்பதால் அவர்களால் சாதிக்கப்படும் விடயங்கள் ஆச்சரியமாக நோக்கப்படுவதோடு அவர்களது எதிர்கால இருப்புக்கள் தீர்மானிக்கப்படும்.

 

அத்தோடு இரு இளம் அணித்தலைவர்களும் இப்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிரு இடங்களில் இருப்பதால் விறுவிறுப்பான ஒட்டக குவிப்புப் போட்டியோடு, தங்கள் தலைமைத்துவத்துக்கான பரீட்சையிலும் சித்தியடையவேண்டி உள்ளது.

 

நாளை தொடரின் முதல் போட்டி ஆரம்பிக்கவுள்ள பிரிஸ்பேன் (Gabba) மைதானம் அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படுவது. கடந்த 30 ஆண்டுகளாக அவுஸ்திரேலியா எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இங்கே தோற்கவில்லை.

 

பார்க்கலாம்..
நாளை வரலாறு மாறுகிறதா அல்லது அவுஸ்திரேலியா தனது பரம வைரிகளை தொடர்ந்து வதைக்கப்போகிறதா என்று..

<<More News>>

<<Our other websites>>

Tags :Ashes feature article Tamil 2017, Tamil Sports News, India vs Sri Lanka 1st Test Kolkata 2017, Ashes feature article Tamil 2017, Ashes feature article Tamil 2017

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here