என்னாச்சு இந்தியாவுக்கு? எப்படி இந்த எழுச்சி ?

India cricket team conservative victory feature 2017
(India cricket team conservative victory feature 2017)
A.R.V.லோஷன் 
 
டெஸ்ட் தரப்படுத்தலில் – முதலாமிடம் 
ஒருநாள் தரப்படுத்தலில் – இரண்டாமிடம் 
T 20 தரப்படுத்தலில் முதலிடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
விராட் கோலியின் இந்திய அணி கிரிக்கெட் உலகில் ஒரு அசைக்கமுடியாத வெற்றி அணியாக தற்சமயம் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 
உள்நாடோ  வெளிநாடோ எங்கே, எந்த வடிவ கிரிக்கெட் என்றாலும் எல்லா அணிகளுமே இந்திய அணியோடு விளையாடும்போது மிகவும் கவனமாக இருப்பதோடு, ஒரு தோல்விப் பயம் தானாகத் தொற்றிவிடும்..
 
கோலியின் தலைமையிலான இந்திய அணியின் வெற்றி நடை அத்தகையது.
 
2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் (காலி மைதானத்தில் இலங்கையின் பந்துவீச்சாளர்களால் உருட்டி எடுக்கப்பட்ட பிறகு) சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பித்த டெஸ்ட் வெற்றியுலா  இப்போது உலகின் முதற்தர டெஸ்ட் அணியாக மகுடம் சூடி வைத்துள்ளது.
 
தொட்டதெல்லாம் துலக்குதல் என்று சொல்வது விராட் கோலியைப்  பொறுத்தவரையில் மிகப் பொருத்தமாகவே அமைந்துபோனது.
டெஸ்ட் தலைவராகப் பொறுப்பெடுத்த நாள் முதல் இதுவரை தலைமை தாங்கிய 29 டெஸ்ட் போட்டிகளில் 19இல் வெற்றியைச் சுவைத்திருப்பதோடு, மூன்றே மூன்று போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்துள்ளார். 7 போட்டிகள் சமநிலையில்.
கோலியை விட அதிகமான வெற்றிகளை சுவைத்துள்ள மற்ற இரு இந்திய அணித்தலைவர்களும் இவரை விட அதிகளவான போட்டிகளில் இந்தியாவை வழிநடாத்தியுள்ளார்கள்.
மகேந்திர சிங் தோனி  – 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகள்.
சௌரவ் கங்குலி – 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகள்.
ஆனால் கோலியின்  தலைமையில் வெறும் மூன்றே தோல்விகள்..
தோனியின் தலைமையில் 18 தோல்விகளும், கங்குலியின் தலைமையில் 13 தோல்விகளும்.
 
ஒருநாள் போட்டிகளில் தோனி  என்ற இந்தியாவின் மிக வெற்றிகரமான தலைவரினைப்  பிரதியீடு செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. முன்னரே இடையிடையே சில போட்டிகளில் தலைமை தாக்கியிருந்தாலும், தோனி  கடந்தாண்டு இங்கிலாந்து இந்தியாவுக்கு வரும் நேரம் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள, கோலி இந்திய ஒருநாள் அணியையும் பொறுப்பெடுக்கிறார்.
 
தோனி  இந்திய அணியை மிக வெற்றிகரமான ஒரு அணியாக வழிநடாத்தியத்தைப் போல கோலியினால்  கொண்டுசெல்ல முடியுமா என்றிருந்த கேள்விக்கு கோலி  தனது தலைமைத்துவத்தினால்  மட்டுமில்லாமல், தனது துடுப்பினாலும் தொடர்ச்சியாகப் பதிலை அளித்து வந்திருக்கிறார்.
 
இதுவரை முழுமையாகப் பொறுப்பேற்ற பிறகு கோலி  தலைமை தாங்கிய 26 போட்டிகளில் 19 வெற்றிகள் – 6 தோல்விகள் – ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்ட்து.
(மொத்தமாக 43 போட்டிகளில் 33 இல் வெற்றி, 9 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி கைவிடப்பட்டது)
இந்த 26 போட்டிகளில் விராட் கோலி தான் இந்தியாவின் அதிகூடிய ஓட்டக்  குவிப்பாளர்.
தலைமைச் சுமை சில வீரர்களின் துடுப்பாட்டத்தைப் பாதிப்பதைப்  போல கோலிக்கு  எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
மாறாக அவரை ஒரு ஓட்டக்குவிப்பு இயந்திரமாக மாற்றிவிட்டுள்ளது.
 
6 சதங்கள், 7 அரைச்சதங்களுடன் 1460 ஓட்டங்கள். சராசரி – ​76.84
தலைவரே முன்னின்று ஓட்டங்களைக் குவிக்கையில்
(டெஸ்ட் போட்டிகளில் – இப்போது நடைபெறும் கொல்கத்தா டெஸ்டில் கோலி பெற்ற பூஜ்ஜியத்தை சேர்க்காமல்,  அணியின் தலைவராக 29 போட்டிகள் – 10 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 59.53 என்ற அதி சிறப்பான சராசரியுடன் 2560 ஓட்டங்கள்)
 மற்ற வீரர்களுக்கும் தானாக ஒரு எழுச்சி வருமா இல்லையா?
இந்தக் காலகட்டத்தில் கோலியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வீரர்கள் அனைவருமே தமது திறமைகளை வெளிப்படுத்தியது கவனிக்கக்கூடியது.
 
அது பந்துவீச்சாளருக்கும் பொருந்தும்.
 
டெஸ்ட் போட்டிகளிலும் கோலியின்  தலைமையில் விளையாடிய புதிய வீரர்களும் சரி, அணிக்குள் மீண்டும் வந்து தம்மை நிலைநிறுத்தியவர்களும் சரி யாரும் ஏமாற்றவில்லை.
இதிலே இன்னொரு சுவாரஸ்யம் கோலி  இதுவரை தலைமை தாங்கிய எல்லாப் போட்டிகளிலும் வேறுவேறு பதினொருவரே இடம்பிடித்துள்ளார்கள்.
அந்தந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அணியின் வெற்றி வாய்ப்புக்கருதி மாற்றங்களை செய்வதில் எந்தவொரு தயக்கமும் காட்டவில்லை கோலி.
அவர்களும் சோபிக்கத் தவறவில்லை.
 
அனில் கும்ப்ளேயின் பயிற்றுவிப்பு காலம் தொட்டு இதே நடைமுறை இருந்தாலும் கோலிக்கு அவருடன் ஏற்பட்ட முரண்பாடு அணியைத் தடுமாறவைக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்ட நேரம், கோலியுடன் இணங்கிப் போகக்கூடிய ரவி ஷாஸ்திரி  பயிற்றுவிப்பாளர் ஆனார்.
இவர் நினைப்பதை அவர் ஏற்பதும் அவர் சொல்வதை இவர் அங்கீகரிப்பதுமாக அணியின் போக்கு ஒரே நிலையில் பயணிக்கத் தொடங்கியது.
வெற்றிகள் கிடைப்பதுடன் அணி வீரர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊட்டப்பட்டது.
 
​ராகுல் ஒரு நம்பகமான வீரராக மாறிப்போனார்.
மீண்டும் வந்த தவான் ஓட்டங்களை மலையாகக் குவிக்கிறார்.
பாண்டியா எதிரணிகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அதிரடி சகலதுறை வீரராக மாறியுள்ளார்.
ரஹானே, புஜாரா இருவரையும் எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் நம்பி இருக்கலாம்.

இடையிடையே அணியில் வந்து போகும் மனிஷ் பாண்டே, கருண் நாயர் போன்றோரும் ஓட்டங்களை பெறுகின்றனர்.

பந்துவீச்சாளர்களில் பும்ரா, புவனேஷ்வர், உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி  என்று நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் ​எப்போது அணிக்குத் தேர்வு செய்யப்பட்டாலும் அணிக்காக விக்கெட்டுக்களை உடைத்துத் தருவதில் முன்னிற்கிறார்கள்.


இந்தக் காலகட்டத்தில் அறிமுகமான குல்தீப் யாதவ், யசுவேந்திரா சஹால், ஜெயந்த் யாதவ், அக்ஸர் பட்டேல் முதல் தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னணி நிலைகளில் உள்ள அஷ்வின், ஜடேஜா வரை யாருக்கும் மாறி மாறி ஓய்வுகொடுத்து விளையாடக்கூடிய அளவுக்கு நிறைந்துபோயிருக்கிறது வளம்.
தோனியை டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராகப் பிரதியீடு செய்த ரிதிமான் சஹா உலகின் முன்னணி விக்கெட் காப்பாளராக மட்டுமில்லாமல், தேவையான போது ஓட்டங்களையும் குவிக்கிறார்.
இந்த வீரர்கள் மட்டுமன்றி வெளியே இந்தியாவின் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகப் பிரகாசித்து வரும் ரிஷாப் பாண்ட், குருகீரத் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தவல் குல்கர்னி, உனத்கட், அவேஷ்  கான், ஷர்தால் தக்கூர், விஜய் ஷங்கர், க்ருனால் பாண்டியா, மந்தீப்  சிங் என்று வரிசையாக பல வீரர்கள் உத்வேகத்தோடு ஆடி வருகிறார்கள்.
ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் தம்மை அணியில் நிரந்தரப்படுத்திக்கொள்ள அற்புதமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
போட்டித் தன்மை மிகுந்த இந்திய கிரிக்கெட் சூழல் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியாக இல்லாமல் அவர்களுக்கு மேலும் சாதிக்கவேண்டும் என்ற உந்து சக்தியாக அமைகிறது.
அதை அணித்தலைவர் கோலியே முன்னின்று குவிக்கும் ஓட்டங்கள் சான்று பகிர்கின்றன.
சுழற்சி அடிப்படையில் வீரர்களின் பெறுபேறுகளை 2019 உலகக்கிண்ணம் நோக்கி அடையாளம்காணும் வண்ணம் விளையாடினாலும் கூட அளவுக்கதிகமாக பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கவில்லை.
​இலங்கை போன்ற அணிகள் கடந்த இரு வருடங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீரர்களை அறிமுகப்படுத்தி வந்தும் இன்னும் உறுதியான நிலையைப் பெறமுடியாமல் இருக்க, இந்தியா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு தமது முதல் நிலை வீரர்கள் அத்தனை பேருக்கு ஒய்வு வழங்கி முற்றிலும் புதிய வீரர்களை ஈடுபடுத்தியும் கூட, 2015 முதல்
20 T20 சர்வதேச அறிமுகங்களையும் ,

14  ஒருநாள் சர்வதேச

அறிமுகங்களையும்,
7 டெஸ்ட் அறிமுகங்களையும் மட்டுமே வழங்கியுள்ளது.
இடையிடையே கம்பீர், அபினவ் முகுந்த், இஷாந்த் ஷர்மா, தினேஷ் கார்த்திக் போன்ற முன்னைய, சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கவும் தவறவில்லை.
மிகவும் துணிச்சலாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் கூட சிரேஷ்ட வீரர்களும் அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத்தர வல்ல வீரர்களுமான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை ஒய்வு கொடுத்து புதிய, இளம் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை வெளிப்படுத்தக் களம் அமைத்துக்கொடுத்திருப்பதானது இந்தியாவின் ஆரோக்கிய நிலையைக் காட்டுகிறது.
இனியும் உள்ளே வரப்போகிற வீரர்கள் நேர்த்தியான ஒரு வழிமுறையில் உள்வாங்கப்படுவதும், சீரான ஒரு தேர்வு முறை இருப்பதும் அணியை உயர்மட்டத்தில் வைத்திருக்கிறது.
டெஸ்ட்டில் முதலிடம், ஒருநாள் போட்டிகளில் இரண்டாமிடம் (தசம புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே தென் ஆபிரிக்காவிடம் பின்தங்கி நிற்கும் இந்தியா அடுத்த போட்டிகளில் முந்திவிடக்கூடும் ) T20 போட்டிகளிலும் முதலிடத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆரோக்கியமான போக்கும் கட்டமைப்பும் இப்போதைய இந்திய கிரிக்கெட் சபையில் இருப்பது தான் ஒரு காலத்தில் அரசியலும் ஊழலும் கோலோச்சிய இந்திய கிரிக்கெட்டை இப்பொழுது சர்ச்சைகள் அற்ற ஒரு வெற்றிகரமான அணியாக வலம்வரச் செய்துகொண்டிருக்கிறது.
எனினும் இனி வெளிநாடுகளில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடர்கள் தான் விராட் கோலியின் அணிக்கான பெரும் சவாலாக , அவர்களது திறமைகளின் அளவுகோலாக அமையும்.
ஜனவரியில் தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடரோடு சவால் ஆரம்பிக்கிறது. அதிலும் கோலி தடுமாறுகின்றதாகக் கருதப்படும் வேகப்பந்து மாற்று ஸ்விங் ஆடுகளங்களில். அவரது தனிப்பட்ட துடுப்பாட்டம் மற்றும் தலைமைத்துவம் இரண்டுக்குமே சவாலாக விளங்கக்கூடிய தொடரில் சாதிப்பாரா பார்க்கலாம்.
எல்லாவற்றுக்கும் முதல் இலங்கைத் தொடர் முடியட்டும்…!

<<More News>>

<<Our other websites>>

Tags : India cricket team conservative victory feature 2017, India cricket team conservative victory feature 2017, India cricket team conservative victory feature 2017,India cricket team conservative victory feature 2017, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here