பாகிஸ்தானின் கோட்டையில் ஏறிய இலங்கையின் வெற்றிக்கொடி !! : ரங்கன ஹேரத் 400!

Sri Lanka vs Pakistan test series 2017

(Sri Lanka vs Pakistan test series 2017)

​A.R.V.லோஷன்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆறாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி – மின்விளக்கு ஒளியில் ஆடப்படும் டெஸ்ட் இன்று டுபாயில் இடம்பெறுகிறது.

ஏற்கெனவே பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இலங்கை அணி முதல் தடவையாக இளஞ்சிவப்பு பந்து போட்டியை சுவைக்கப்போகிறது. ஒரு சரித்திர பூர்வ போட்டி இது.

முதல் டெஸ்ட் போட்டியை வென்றெடுத்த இலங்கை இதுவரை வேறெந்த அணியும் மத்திய கிழக்கு மண்ணில் நிகழ்த்தாத சாதனையொன்றைக் குறிவைத்துள்ளது. பாகிஸ்தானின் முதலாவது தொடர் தோல்வி. இலங்கை அணி இந்த சரித்திரபூர்வ டெஸ்ட் போட்டியை தோல்வியில்லாமல் தவிர்த்துக்கொண்டாலே இந்த சாதனையைப் புரிந்துவிடும்.

இதற்கெல்லாம் அடிகோலிய அபுதாபி டெஸ்ட் போட்டி பற்றிய பார்வை…

ரங்கன ஹேரத்தின் 400வது விக்கெட்டை எடுத்துக் கொண்டாட இதைவிட ஒரு அற்புதமான தருணம் வேறு வாய்த்திருக்குமா? இந்தியாவிடம் மரண அடியை சொந்த மண்ணில் வாங்கிக்கட்டிய சோகம் போகவும், அவமானம் சிறிதளவாவது நீங்கவும் இலங்கை அணிக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது.

முதலாவது போட்டியின் வெற்றி இன்னும் சுவைக்கக் காரணம் மத்தியூஸ் அணியில் இல்லாமல் கிடைத்த ஒரு மகத்தான வெற்றி இது. அபுதாபி மைதானத்தில் இதுவரை பாகிஸ்தான் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலுமே தோற்றதில்லை.
இலங்கை இதுவரை மத்திய கிழக்கில் டெஸ்ட் தொடர் எதையும் வென்றதில்லை. 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றி, இரண்டு தோல்விகள்.

இரு அணிகளும் புதிய தலைவர்களின் தலைமையில், அண்மைக்கால ஓய்வுகளாலும் உபாதைகளாலும் தடுமாறும் அணிகளாக இன்னும் உறுதிப்படாத அணிகளாகத் தான் இந்த மோதல் ஆரம்பித்தது.

இரண்டு அணிகளும் தலா நானூறு ஓட்டங்களைக் குவித்தபோது போட்டி நிச்சயம் சமநிலையில் தான் முடிவடையப் போகிறது என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் மத்திய கிழக்கு ஆடுகளங்களில் எப்போதும் இது தான் வழக்கம்.

3 1/2 நாட்கள் துடுப்பாட்ட சொர்க்கமாக விளங்கும் ஆடுகளம் சடுதியாக சுழல் பந்துப் பொறிக்கிடங்காக மாறிவிடும்.
இங்கிலாந்து அணி ஒரு தடவை சயீத் அஜ்மல், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் பந்துவீச்சில் 72 ஓட்டங்களுக்கு நான்காம் இன்னிங்சில் சுருண்டதும் மத்திய கிழக்கின் வழக்கமானதே.

எனினும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது ஆடுகளம்அவ்வளவு ஆபத்தானது என்று அறிகுறிகள் தென்படு முன்னரே இலங்கை அணியின் துடுப்பாட்டம் தடுமாற ஆரம்பித்தபோது – “இதைத் தானே சில காலமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.. இந்தப் போட்டியும் இன்னொரு தோல்வி தான் ” என்று நினைத்திருக்க..
யசீர் ஷாவுக்கு மட்டுமில்லை, பகுதி நேரப் பந்துவீச்சாளருக்குமே தடுமாற ஆரம்பித்தனர்.

180 வரையான ஓட்ட இலக்கு வழமையாகவே பதறி, கிடைக்கும் வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தானுக்கு சிக்கலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும் யசீர் ஷாவின் மந்திர சுழலும் சேர்ந்து இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸை படுமோசமாக மாற்றின.

150 டெஸ்ட் விக்கெட்டுக்களை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்த யசீர் ஷா பாகிஸ்தானின் கைகளில் கொடுத்த டெஸ்ட் போட்டியை ரங்கன ஹேரத்தும், டில்ருவான் பெரேராவும் சேர்ந்து இலங்கைக்காக அபகரித்தது தான் சுவாரஸ்யம்.

இலங்கை முடிந்தது – 136 என்ற இலக்கை பாகிஸ்தான் தலையால் நடந்தாவது அடையும் என்று எண்ணியிருந்தாலும் வழமையான பாகிஸ்தானின் பதற்றமும், பதறாமல் சந்திமால் இலங்கையின் இரண்டு மூத்த சுழல்பந்துவீச்சாளரையும் பயன்படுத்தியதும் சேர்ந்து ஒரு மகத்தான வெற்றியை பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் 15வது வெற்றியைப் பெற உதவியது.
இதிலே சுவாரஸ்யம் ஹேரத்தின் சுழலில் சிக்கி பாகிஸ்தான் ஐந்து தடவை சின்னாபின்னமாகியுள்ளது.

அபுதாபியில் இரண்டாம் இன்னிங்சில் ஹேரத் கைப்பற்றிய ஆறு விக்கெட்டுக்களோடு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது (இப்போதைக்கு ஒரேயொருவர்) பந்துவீச்சாளர் என்ற பெருமையும் ஹேரத்துக்குக் கிட்டியுள்ளது.

அதைவிட 400 டெஸ்ட் விக்கெட்டுக்களை என்ற மைல் கல்லையும் எட்டிப்பிடித்துள்ளார்.
முரளிக்குப் பிறகு இரண்டாவது இலங்கையர்.
400 விக்கெட்டுக்களை எடுத்த முதலாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர்.
40 வயதை நெருங்கும் ‘இளைஞர் ‘ ஹேரத் தான் இப்போது இலங்கை டெஸ்ட் அணியின் பிரம்மாஸ்திரம்.

ஆனால் அபுதாபி டெஸ்ட்டின் இறுதிநாளில் ஹேரத் ஒரு பக்கம் விக்கெட்டுக்களை வீழ்த்திக் கொண்டிருக்க முக்கிய காரணியாக அமைந்த இன்னொருவர் மறுபக்கம் அழுத்தத்தை வழங்கிக்கொண்டிருந்த டில்ருவான் பெரேரா.
மசூத், அசாம், ஹாரிஸ் சொஹைல் என்று மூன்று முக்கிய விக்கெட்டுக்களையும் வீழ்த்தியும் இருந்தார் டில்ருவான்.
இலங்கை டெஸ்ட் அணியின் மற்றொரு முக்கியமான அலகு இவர்.

இப்படி சில நெருக்கமான போட்டிகளை பாகிஸ்தான் போலவே இலங்கை அணியும் பதறி, காய் நழுவ விட்ட வரலாறுகள் பல பார்த்திருப்போம். ஆனால் அபுதாபி போட்டியில் முக்கியமான கட்டத்தில் ஒரேயொரு பிடி மட்டுமே தவறவிடப்பட்டது,
அழுத்தத்துக்கு உட்படாமல் இலங்கை வெற்றியைப் பெற்றாகவேண்டும் என்று போராடியிருந்தது.

தொடர்ந்து தோல்விகளால் உடைந்துபோயிருந்த இலங்கையின் வீரர்களில் மனநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம் நம்பமுடியாதது.
சந்திமாலுக்கும் இந்த மாற்றத்தில் கணிசமான பங்கிருக்கிறது. இந்த உத்வேகத்தை தொடர்ந்து வைத்துக்கொள்ளவேண்டியது முக்கியம்.

இப்பொது தான் இலங்கை ரசிகர்களையும் உற்சாகமாகப் பார்க்கிறோம்.

இதனால் தான் இன்று ஆரம்பிக்கும் போட்டியையும் இலங்கை ரசிகர்கள் ஆர்வத்துடன் நோக்குகிறார்கள்.

மெத்தியூஸ் இந்தப் போட்டியிலும் விளையாடாதபோதும், இலங்கை அணி உற்சாகமாகத் தெரிகிறது.

முன்னைய போட்டியில் இலங்கை அணியின் ஒரேயொரு சறுக்கலாகத் தெரிந்த திரிமான்னே உபாதை காரணமாக இன்று விளையாடமாட்டார் என்பது இலங்கை அணிக்கு ஒரு வாய்ப்பான விடயம் தான். உள்ளூர் முதற்தர போட்டிகளில் தொடர்ந்து ஓட்டங்களைக் குவித்துவரும் திறமையான இளம்வீரர் சதீர சமரவிக்ரம இன்று தனது அறிமுகத்தைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
வாழ்த்தி வரவேற்போம்.

ஒரு சாதனை டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து சரித்திரபூர்வமான ஒரு போட்டி.
இந்தப் போட்டியில் இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்குமாக இருந்தால் பாகிஸ்தானின் இன்னொரு சாம்ராஜ்யமும் சரிந்துபோகும். அதைவிட முக்கியமாக இலங்கை அணியின் புத்தெழுச்சி தொடரும்.
இனிவரும் ஐந்து மாலைப்பொழுதுகளும் இரவுகளும் பரபரப்புக்கு குறைவிருக்காது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Sri Lanka vs Pakistan test series 2017, Tamil Sports News, New Cricket rules 2017, Sri Lanka vs Pakistan test series 2017,Sri Lanka vs Pakistan test series 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here